உலகை மாற்றப் போகும் பொருளாதாரப் புரிதல் – மறைக்கப்பட்ட உண்மைகள்: 2
தவறான புரிதல் எண் 2:
"பட்ஜெட் பற்றாக்குறை ஒரு குறிப்பிட்ட விகித அளவிலேயே இருக்க வேண்டும். இல்லை என்றால், அதனை ஈடு செய்ய வாங்கும் கடன் உயர்ந்து கொண்டே இருக்கும் என்பதால், கடன் திருப்பிக் கொடுக்கும் திறனை இழந்து, அரசாங்கம் திவாலா ஆகி விடும்."
பணத்தினை உருவாக்கி, வெளியிடும் பண அமைப்பு முறையினை புரிந்து கொள்ளாததால், நிலவும் மாபெரும் தவறான புரிதல் இது.
புழக்கத்தில் உள்ள பணம் எங்கிருந்து வருகிறது?
ஒன்றிய அரசாங்கம் தன்னுடைய கரன்சி பவரை (sovereign currency power) கொண்டு செலவு செய்யும் பொழுது, அந்த செலவில் இருந்து பணம் தோன்றுகிறது.
அரசு முதலில் செலவிடுகிறது, அதன் மூலம், வரி செலுத்துவதை சாத்தியமாக்கும் பணத்தை மக்களிடம் சேர்க்கிறது.
அரசாங்கம் செலவிடும் பணத்தினை கொண்டுதான், வரி செலுத்தவும், அரசாங்க பத்திரத்தை வாங்கவும் முடியும்.
அரசாங்கத்தின் செலவு, வரி செலுத்துதல், அரசாங்க பத்திரம் வாங்குதல், இவைகள் மூன்றில் எது முன் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
புரிதல் எண் 1 இன் விளக்கத்தின் படி, தங்கத்தின் இருப்போ, வெளிநாட்டு பணத்தின் இருப்போ, கையிருப்பில் இருக்க வேண்டிய கட்டாயம், தற்பொழுது உள்ள பண அமைப்பில் இல்லை.
பணப் புழக்கத்தை, தங்கத்தின் இருப்பின் அளவோ, வெளிநாட்டு பணத்தின் இருப்பின் அளவோ கட்டுப் படுத்தாது.
எனவே, பட்ஜெட் திட்ட செலவிற்கான நிதியினை, பணத்தை செலவிட்டு உருவாக்கும், தனித்த அதிகாரத்தை தன்னிடம் கொண்டுள்ள அரசு, திட்ட ஒப்புதலின் படி, தேவையான பணத்தை செலவிடலாம்.
எனவே, பட்ஜெட் திட்ட செலவிற்கான நிதிக்காக, வரி விதிப்போ, அரசாங்க பத்திர விநியோகமோ தேவை அற்றதாகிறது.
அரசாங்கத்தால் செலவிடப் படும் பணம் தான், புழக்கத்தில் இருந்து, பின்னர் வரி செலுத்துவதற்கும், அரசாங்க பத்திரம் வாங்குவதற்கும் பயன் படுகிறது.
பணத்தை உருவாக்கும் அதிகாரத்தையே தன்னிடம் கொண்டுள்ள அரசு, அந்த பணத்தையே கடனாக எதற்காக வாங்க வேண்டும்.
பணத்திற்கு ஒரு மாற்றுதான் அரசாங்க பத்திரம்.
பணம், அரசாங்க பத்திரம் ஆகிய இரண்டையுமே வெளியிடுவது அரசாங்கமே.
பணத்திற்கு வட்டி கிடையாது, பணத்திற்கு மாற்றான அரசாங்க பத்திரத்திற்கு வட்டி கிடைக்கும்.
தற்பொழுது உள்ள பண அமைப்பில், அரசாங்க பத்திரம் வெளியிடுவது, கடன் வாங்குவதற்காக அல்ல.
வட்டி விகித இலக்கை பேணுவது மத்திய வங்கியின் பெரும் பணி ஆகையால், மத்திய வங்கி, அரசாங்க பத்திரம் விநியோகம் மூலம், அதிகமாக உள்ள இருப்பு நிதியை, பண சந்தையில் இருந்து அகற்றுகிறது.
அரசாங்க பத்திரம் வெளியிடுவது, வட்டி விகித இலக்கை பேணுவதற்கு தானே தவிர, கடன் வாங்குவதற்காக அல்ல.
பணம், அரசாங்க பத்திரம் ஆகிய இரண்டையுமே வெளியிடுவது அரசாங்கமே.
தற்பொழுது உள்ள பண அமைப்பில், இதனை வெளியிடுவதற்கு அளவு என்பது, உற்பத்தியில் ஈடுபட கிடைக்கின்ற மனித வளம் உட்பட்ட ஆக்க வளமே.
வெளியிடும் அரசிற்கு வேறு எந்த அளவும் கிடையாது.
பணத்தை உருவாக்கி, வெளியிடும் தனி பெரும் அதிகாரத்தை தன்னிடம் கொண்டுள்ள அரசு, அரசாங்க பத்திரத்தையும் வெளியிடுகிறது.
அவைகளை வெளியிடும் அரசாங்கத்திற்கு, அவைகள் வெறும் வெற்றுத் தாள்கள் தான்.
அதனை உபயோகிக்கும், நமக்குத் தான், அவைகள் மதிப்பு மிக்கவை.
அரசாங்க பத்திரத்தை அரசாங்கத்தின் கடனாக பாவனை செய்வதும், அதனை திருப்பிக் கொடுக்கும் சக்தியை அது இழந்து விடும் என்பதும், புரியா தன்மையோ அல்லது புரிந்தும் புரியாமல் இருப்பதுவே ஆகும்.
ஆனால், இந்த தவறான புரிதலால், நாட்டின் அபரிதமான வளர்ச்சிக்கும், நாட்டு மக்களுக்கும் மிகப் பெரும் தீங்கு இழைக்கப் படுகிறது.
பின்குறிப்பு:
இந்த இருப்பு நிதி பரிமாற்றம், வர்த்தக வங்கிகளுக்கு இடையில் நடக்கும் பொழுது, மொத்த இருப்பு நிதியில் (total reserves in the banking system) எந்த மாற்றமும் இருக்காது.
பரிமாற்றத்தின் போது, எந்த அளவிற்கு ஒரு வங்கியின் தொகை குறைகிறதோ, அதே
அளவிற்கு மற்ற வங்கிகளின் மொத்த தொகை அதிகரித்து இருக்கும்.
வர்த்தக வங்கிகள், மத்திய வங்கியுடன் அல்லது
அரசாங்கத்தின் உடன், நிதி பரிமாற்றம் செய்யும் பொழுது மட்டுமே, மொத்த இருப்பு நிதி
குறையும் அல்லது கூடும்.
ஆனால், அரசாங்கம் செலவிடும் பொழுது, அந்த அளவிற்கு மொத்த இருப்பு நிதி அதிகமாகும்.
அப்பொழுது, அதிகமாகும், (supply)கிடைக்கக் கூடிய இருப்பு நிதிக்கு தேவை இல்லை என்பதால், வட்டி விகிதம் கட்டுக்கு அடங்காமல் குறைந்து, மத்திய வங்கி வட்டி விகித இலக்கை பேணுவது இயலாததாகி விடும்.
Rajendra Rasu
The author writes on monetary systems and political economy
Comments
Post a Comment