உலகை மாற்றப் போகும் பொருளாதாரப் புரிதல் - மறைக்கப்பட்ட உண்மைகள்: 1

பொருளாதார நிர்வாகத்தின் அடிப்படை நோக்கம் என்ன? - அனைத்து குடிமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது. பொருளாதார வளர்ச்சியே அரசாங்கத்தின் முதல் கடமை. தனி ஒருவன் உழைப்பில் பொருள் உருவாகிறது. அவரவர் தேவையை அவரவரே உற்பத்தி செய்யாமல், நாடு முழுவதும் அந்த செயல் நடக்கும் பொழுது, அனைவருக்குமான தேவையை உற்பத்தி செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். அப்படி, நாடு முழுவதும் நடக்கும் பொழுது, அந்த உற்பத்தி ஏன் அனைவருக்கும் பயனுள்ளதாக இருப்பது இல்லை? உழைப்பில் குறை இல்லை, உற்பத்தியில் குறை இல்லை. அப்படி இருந்தும், பயன் உழைப்பவரை அடைய வில்லை என்றால், கொள்கையில், கட்டமைப்பில் எங்கோ குறை உள்ளது. அனைவரும் இணைந்து இதன் காரணத்தை ஆராய்ந்து, சாதாரண மக்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில், இதனை தெரியப்படுத்த வேண்டியது, அரசாங்கத்தின் அதிமுக்கிய பொறுப்பு.

பொருளாதார வளர்ச்சி பற்றி பேசும் பொழுது, மிகவும் சிக்கலான, எவருமே புரிந்து கொள்ள முடியாத கடினமான வார்த்தைகள் பயன்பாட்டில் இருந்தால், அதனை எளிதாக மக்களுக்கு எதிராக பயன்படுத்த முடியும். அதனால்தான், அந்த வளர்ச்சியின் பயன் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வகையில், பொருளாதார கொள்கைகளை கட்டமைக்க முடிகிறது. புரியாதவர்கள் பட்டியலில், பொதுமக்கள் மட்டும் அல்ல, அனைத்து ஆட்சியாளர்களும், வல்லுனர்களும், அரசியல் தலைவர்களும் அடங்குவர். 

பொருள் உருவாக்கத்திற்கு மனித வளமே பெரும் ஆதாரம். மனித வளங்களும் மற்ற இயற்கை வளங்களும் கொண்ட எந்த நாடுமே பெரும் வளர்ச்சியை அடைவதுடன், அந்த வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் உழைப்பவர்களும் பெரும் வளர்ச்சியை அடைவர். ஆனால், அவர்கள் ஏழ்மையிலும் பட்டினியிலும் இருப்பதற்கு, வணிகத்திற்காக உருவாக்கப்பட்ட பணம், உற்பத்தி பொருட்களின் அளவு கோலாக இருக்கும் பொழுது, இந்த தவறான பயன்பாடு நடக்கிறது.  முதலீட்டாளர்களுக்கு உழைப்பின் பயன் பெரும் அளவில் செல்வதற்கும், இந்த புரிதல் இல்லாத கட்டமைப்பு எதிர்ப்பே இல்லாமல் நிலை கொண்டுள்ளதே காரணம்.

இது வெற்று வார்த்தை அல்ல. பணம் உருவாக்கும் முறையை எவர் ஒருவர் புரிந்து கொண்டாலும், இந்த மோசடியை உடன் அறிந்து கொள்ள முடியும். உங்கள் அனுமதியுடன் இந்த விளக்க தொடரை தொடர்கிறேன். எவருக்கும் அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவு படுத்த கடமை பட்டுள்ளேன்.

தவறான புரிதல் எண் 1:

"பணத்தை உற்பத்தி செய்யும் தனித்த அதிகாரத்தை தன்னிடம் கொண்டுள்ள ஒன்றிய அரசு, தனது பட்ஜெட் திட்ட செலவுகளை, வரியையும் கடனையும் கொண்டே செய்ய முடியும்".

பண உற்பத்தி எதன் அடிப்படையில் செய்யப்படுகிறது? 

அரசாங்கம் எந்த ஒரு பண அமைப்பு (monetary system) முறையை பின்பற்றுகிறதோ, அந்த அடிப்படையில்தான் பணம் உற்பத்தி செய்யப்படுகிறது. அது "சுய மதிப்பு உள்ள பண வெளியீடு முறை"யாக (fixed exchange rate monetary system like Gold Standard and Bretton Woods System) இருக்கலாம், அல்லது "சுய மதிப்பற்ற பண வெளியீடு முறை"யாக (floating exchange rate monetary regime) இருக்கலாம்.

சுய மதிப்பு உள்ள பண வெளியீடு முறையில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தங்க விலைக்கு ஏற்ப, ஒரு நாட்டின் பணமும், மற்றொரு நாட்டின் பணமும் பரிமாற்றம் செய்து கொள்ள, நிலையான விகிதம் அமைக்க படுவதுடன், ஒரு நாட்டின் பணத்தின் மதிப்பு, தங்கத்தினுடன் இணைக்க படுவதால், பணத்தை தங்கத்தினுடன் பரிமாறிக் கொள்ளும் உறுதியை, அரசாங்கம் அளிக்கிறது (Recent Global Crisis and the Demand for Gold by Central Banks: An Analytical Perspective. DEPARTMENT OF ECONOMIC AND POLICY RESEARCH, RBI, SEPTEMBER 2011). இந்த நிலையான விகிதத்தை ஏற்று கொண்ட அனைத்து நாடுகளும், இதற்கு கட்டுப் பட்டவை. இந்த முறையில், தங்கத்தின் கையிறுப்பே, நாட்டில் புழக்கத்தில் உள்ள பண அளவையும் நிர்ணயம் செய்கிறது. 

எனவேதான், பண புழக்கம் தங்கத்தின் இருப்பின் அளவை எட்டி விட்டால், அதற்கும் மேல், அரசாங்கத்தின் செலவை ஈடு செய்ய, அரசாங்கம் வரி விதிக்கிறது. வரி வருமானத்திற்கும் மேல், ஆகும் செலவே, பட்ஜெட் பற்றாக்குறை எனப்படுகிறது. அதற்கான நிதியை கடன் பத்திரத்தின் மூலம் திரட்டுகிறது. வெளிநாட்டு வர்த்தக உபரி மூலம் கிடைக்கும் தங்கம், தங்க கையிருப்பை உயர்த்துவதால், அதனால் பண புழக்கத்தை அதிகரிக்க முடியும். எனவேதான், இந்த பண அமைப்பில், ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சி முக்கியம் பெற்றது (ஏற்றுமதியில் நாட்டிற்கு பொருள் மற்றும் சேவை இழப்பு ஏற் பட்டாலும்(இதன் விளக்கம், மற்றொரு தவறான புரிதலில்)).

ஆனால், 1971 ல் அமெரிக்க அதிபர் நிக்சன் அமெரிக்க டாலருக்கு தங்கத்துடன் இருந்த இணைப்பை கைவிடுகிறோம் என்று அறிவித்த முடிவின் விளைவாக, தங்கத்தினை சார்ந்த, இந்த சுய மதிப்பு உள்ள பண வெளியீடு முறை, உலகம் முழுவதும் கைவிடப்பட்டது. அன்றில் இருந்து, பணத்தை தங்கத்தினுடன் பரிமாறிக் கொள்ள அளித்த உறுதி, அனைத்து நாடுகளிலும் செயல் இழந்தது. 

அதன் பிறகு, பெரும்பாலான நாடுகள் சுய மதிப்பற்ற பண வெளியீடு முறையை பின்பற்றுகின்றன. இந்தியாவும், மார்ச் 1993 ல் இருந்து, சுய மதிப்பற்ற பண வெளியீடு முறையை பின்பற்றுகிறது. (India has been operating on a managed floating exchange rate regime from March 1993. All foreign exchange receipts could now be converted at market determined exchange rates). 

சுய மதிப்பற்ற பணம் என்றால், அது தங்கம் சார்ந்து இல்லை, தங்க கையிருப்பு சார்ந்த வரம்பும் அதன் செலவீனத்திற்கு இல்லை.

அரசாங்கம், தான் செய்கிற செலவால்தான், புதிய பணத்தை வெளியில் புழக்கத்தில் விட முடியும். 

அதை அரசாங்கம் எப்படி செய்கிறது? 

அரசாங்க உபயோகத்திற்காக பொருட்கள், சேவைகள், மற்றும் பணியாளர்களின் வேலை நேரத்தை வாங்குவதன் மூலம், அரசாங்கம் பணத்தை புழக்கத்திற்கு அளிக்கிறது.

அப்படி செய்யும் செலவு அரசாங்கத்திடம் உள்ள தங்கத்தின் அளவிற்குத் தான் செய்யமுடியும் என்று இருந்த கட்டுப்பாடு, அரசாங்கம் வாங்கும் பொருட்கள், சேவைகள், மற்றும் பணியாளர்களின் அளவை பெரிதும் குறைத்தது. 

அது நாட்டின் பாதுகாப்பு தேவையாக இருக்கலாம், உங்களை வேலையில் அமர்த்துவதாக இருக்கலாம், சிமெண்ட் ஆக இருக்கலாம், இரும்பு கம்பியாக இருக்கலாம் - அனைத்தும் குறைக்க பட்டது. 

அதனால் நாட்டின் வளர்ச்சி, மக்களின் வளர்ச்சி, ஏழ்மை ஒழிவது என்று அனைத்துமே பெரிதும் பாதிக்கப் பட்டது.

ஆனால் அந்த கட்டுப்பாடு 1993 ம் ஆண்டிற்கு பிறகு இல்லை. 

ஒன்றிய அரசு, எந்த வித வரம்பும் இல்லாமல், செலவு செய்யும் அதிகாரத்தை முழுவதுமாக திரும்ப பெற்றது. 

காலாவதி ஆன, தங்கத்துடன் இணைக்கப்பட்ட பண கட்டமைப்பு முறையினால், உருவாக்கப்பட்ட பட்ஜெட் நடைமுறையான, வரியினை கொண்டு செலவு செய்யும் வழக்கம், இனி தேவை இல்லை. 

பணத்தை உருவாக்கி, அதனை செலவு செய்யும் அதிகாரத்தை கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்காக எந்த அளவு வேண்டுமானாலும், வேலைக்காக மக்களை, பொருட்களை, சேவைகளை அரசாங்கத்தால் வாங்க முடியும். 

அரசாங்கம் தற்பொழுது செலவு செய்யும் அளவிற்கு உள்ள வரம்பு, வாங்குவதற்கு பொருட்களும், சேவைகளும், மனித உழைப்பும் கிடைக்கும் வரைதான்.

அதாவது, இவைகள் வாங்குவதற்கு கிடைக்கும் வரை, அரசாங்கம் செலவை குறைக்க வேண்டிய தேவை இல்லை. 

அளவிடமுடியாத உலகளாவிய சமுதாய மாற்றத்திற்கு வித்திடும், இந்த நிகழ்வு, அறவே மறைக்கப்பட்டது. இதனை வெளிக்கொணர்ந்த பெருமை வாரன் மோஸ்லர் (Warren Mosler) ஐ சாரும். 

இதன் விளைவுகள்:

1. பண வெளியீட்டிற்கு தங்க கையிருப்பு சார்ந்த கட்டுப்பாடு இப்பொழுது இல்லை.

2. நாட்டின் பணத்தின் மதிப்பு, மற்றொரு நாட்டு பணத்தின் மதிப்புடன் நிலையாக நிர்ணயிக்கப்படவில்லை.

3. ஒரு நாட்டின் பணத்திற்கும், மற்றொரு நாட்டின் பணத்திற்கும் இடையில் உள்ள மதிப்பு, அந்நிய செலாவணி சந்தையில், தேவைக்கு (based on demand and supply) ஏற்ப தொடர்ந்து நிர்ணயம் செய்யப் படுகிறது.

4. தங்கத்தின் இருப்போ, வெளிநாட்டு பணத்தின் இருப்போ, கையிருப்பில் இருக்க வேண்டிய கட்டாயம், இந்த பண அமைப்பில் இல்லை.

5. பண புழக்கத்தை, தங்கத்தின் இருப்பின் அளவோ, வெளிநாட்டு பணத்தின் இருப்பின் அளவோ கட்டுப் படுத்தாது.

6. எனவே, பணத்தை உற்பத்தி செய்யும், வெளியிடும் தனித்த அதிகாரத்தை தன்னிடம் கொண்டுள்ள அரசு, திட்ட ஒப்புதலின் படி, பட்ஜெட் செலவினை  செய்து கொள்ளலாம். அரசு செய்யும் செலவே, பண வெளியீடு.

7. பட்ஜெட் திட்ட செலவிற்கான நிதிக்காக, வரி விதிப்போ, கடன் பத்திர விநியோகமோ தேவை அற்றதாகிறது. வரி விதிக்க மற்ற காரணங்கள் உள்ளது.

பெயரளவு இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்படும்போது, உண்மையான பொருளாதாரம் தனது முழுத் திறனையும் எட்ட முடியும். தேவையான பணப்புழக்கத்தை உறுதிசெய்யும் புதிய நாணய அமைப்பால் கிடைக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி, வேலைவாய்ப்புக்குத் தகுதியான கோடிக்கணக்கான மக்களைக் கொண்டு மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தையையும் தேவையான உற்பத்தி விநியோகத்தையும் உருவாக்குவதன் மூலம், நாடு அபரிமிதமான வளர்ச்சியை அடையும் நிலையில் உள்ளது. இது முழுவதுமாக ஒரு அரசியல் முடிவதுதான். 

இந்த புரிதலே அனைத்திற்கும் அடிப்படையான புரிதல்; ஏழ்மையை அடியோடு துடைத்து எறிய கூடிய புரிதல்.


Rajendra Rasu
The author writes on monetary systems and political economy



Comments